Tuesday, July 24, 2012

தல வரலாறு

ஊர் பெயர் :


     இந்த ஊரின் பழைய பெயர் விக்கிரம சோழபுரம்  என்பதாகும். விக்கிரம சோழன்  என்ற  பட்ட பெயர் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன்  (1012-1044) காலத்தில் இவ்வூர் வணிக நகரமாக உருவாக்கப்பட்டது.  கி.பி  1068 இல்  வீரராஜேந்திரன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த மடத்திற்கு இடப்புறமாக இம்மன்னரால் கொடுக்கப்பட்டதை அந்த கல்வெட்டு கூறுகிறது .  பிற்காலத்தில் விக்கிரமம் எனவும் விக்கிரமங்கலம் எனவும் மாறிவிட்டது .


கல்வெட்டுகள்:


    சோழீஸ்வரர் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பிற்கால கல்வெட்டுகளும் ஒரு செப்பேடும் உள்ளன.   இவ்வூரை பற்றி கூறும் கல்வெட்டுகள் கங்கைகொண்டசோழபுரம் கீழபழுவூர் வேலூர் திருபுலிவனம் அச்சிறுபாக்கம் பிரம்மதேசம் அய்யன்பேட்டை ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ளன.  


கோயிலின் காலம் பெயர் :


     இங்குள்ள சிவன்கோயில் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இன்றைக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபெற்ற பழமை உடையது.  கல்வெட்டு செப்பேடுகளில் சோழீஸ்வரர் பிரையநியம்மை என இக்கோயில் இறைவனும் அம்மனும் குறிப்பிடபடுகின்றனர்.  சோழர் கால செப்பு திருமேனிகளும் சிற்பங்களும் உள்ளன.  இரண்டு கோபுரங்களும் பிரகாரங்களும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டன.


திருப்பணிகள்:


     இக்கோயிலுக்கு 1912 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.  


ராசி மண்டலம்-திருக்குளம்:


     இக்கோயில் மகாமண்டபமும் இதன் கூரையில் உள்ள ஓவியங்களும் விஜயநகர , நாயக்கர் காலத்தை சேர்ந்தவைகளாகும்.  இம்மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளை குறிப்பிடும் ராசி மண்டல சிற்பங்கள் உள்ளன .  இக்கோயில் எதிரில் உள்ள திருக்குளம் சோழர் காலத்தில் வெட்டப்பட்டது .


கோயிலின் சிறப்பு அம்சங்கள்:


     இங்குள்ள சனீஸ்வரர் சன்னதியில் ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் தாமரை ,அரளி போன்ற பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்தனையாகி திருமண தடைகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இதேபோல் பைரவர் சன்னதியில் வழிபாடுகள் செய்தால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி வளமான வாழ்கை அமையும் .  இக்கோயில் அம்பாள் தெய்வீக சக்தி நிறைந்த அம்மனாகும் .


பெருமாள் கோயில்:


     இவ்வூர் பெருமாள் கோயில் கி .பி  1819 இல் அரியலூர் பாளைக்காரர் விஜய ஒப்பிலாதம்மாழ்வராயர் பட்டாபிஷேகம் செய்து கொண்டதன் நினைவாக வெங்கிடப்பனயினார் என்பவரால் திருப்பணி செய்யப்பட்டது .


நாட்டு பிரிவுகள் :


     சோழர் காலத்தில் இவ்வூர் கடாரன்கொண்ட சோழவளநாட்டு மதுராந்தக வளநாடு என்னும் நாட்டுபிரிவுகளின் கீழ் இருந்துள்ளது.


வணிகர்கள் பெருந்தெருக்கள் சமணர் புத்தர் சிலைகள்:


     இவ்வூரில் ஏராளமான வணிகர்கள் வாழ்ந்துள்ளனர்.  அவர்கள் குடியிருந்த தெருக்கள் கிடரன்கொண்ட சொழபெருந்தேறு  மதுராந்தக பெருந்தெரு என அழைக்கப்பட்டது .  இங்குள்ள சமணர் புத்தர் சிலைகள் சோழர் காலத்தில் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழு வழிபட்ட சிற்பங்களாகும் .  இங்கு வாழ்ந்த செட்டியார்கள் சொழபுரன்செட்டியார் என்ற பெயரில் பல்வேறு ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர் .


மருதை ஆறு :


     இவ்வூருக்கு அருகில் ஓடுகின்ற மருதை ஆறு ராஜேந்திரசோழன் காலத்தில் விக்கிரமசோழ பேராறு என்று அழைக்கப்பட்டது.


உலைகலமேடு :


     ஆலவாய் என்ற சோழர் காலத்தில் மிக பெரிய தொழில் கூடமாக திகழ்ந்தது .  இங்கு படை கருவிகள் , செப்பு திருமேனிகள் மற்றும் பிற உலோக பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன .  தற்பொழுது அந்த இடம் உலைகலமேடு எனவும் அழைக்கபடுகிறது .


சோழ மன்னர்களின் அரண்மனை :


     சோழமன்னர்கள் வந்து தங்குகின்ற அரண்மனைகள் இங்கு கட்டப்பட்டன .  இந்த அரண்மனையில் விக்கிரமசோழன் , இரண்டாம் குலோத்துங்கன் , மூன்றாம் குலோத்துங்கன் , ஆகிய மன்னர்கள் தங்கியிருந்து அரசாணைகள் வெளியிட்டதை கீழபழுர் , வேலூர் , அச்சிறுபாக்கம் பிரமதேசம் திருபுளிவனம் , அய்யன்பேட்டை , ஆலங்குடி , ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன .


பெருவழிகள்:


     தஞ்சாவூருக்கும் கங்கைகொண்ட சோழ புறத்திற்கும் இடையே இவ்வூர் வழியாக சென்ற நெடுஞ்சாலை அக்காலத்தில் விளாங்குடி பெருவழி , குலோத்துங்கசோழ பெருவழி என அழைக்கப்பட்டது .  அந்த சாலை தஞ்சாவூர், விளாங்குடி , கீழபழூர், வி.கைகாட்டி , விக்கிரமங்கலம், முட்டுவான்சேரி , கோவிந்தபுத்தூர் , ஸ்ரீ புரந்தான் , மதனத்தூர் வழியாக கங்கைகொண்டசோழபுரம்  சென்றடைந்தது .


சுற்றியுள்ள ஊர்கள் :


     விக்கிரமங்கலத்தை சுற்றி பல வரலாற்று சிறப்புடைய ஊர்கள் உள்ளன .  நாகமங்கலம் என்ற ஊர் ராஜேந்திர சோழரின் மனைவி வானவன்மாதேவி என்பவரின் பெயரால் வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என அழைக்கபட்டது .  இவ்வூரில் உள்ள ஏரியின் பெயர் அம்பிகாபதி ஏரி  என்று அழைக்கப்பட்டது .  இது கம்பரின் மகன் அம்பிகாபதியை நினைவுபடுத்துகிறது .  செட்டி திருக்கோணம் , பெரிய திருக்கோணம் ஆகிய ஊர்கள் ஒன்று சேர்ந்து மதுராந்தகபுரம் என்னும் பெயரால் மிகபெரிய வணிக நகரமாக இருந்தது .  உடையவர் தீயனூர் மனுகுலகேசரினல்லூர் என அழைக்கப்பட்டது .   மனுகுலகேசரி எனபது ராஜேந்திர சோழரின் மகனான சொழகேரலன் என்பவரின் பட்ட பெயராகும் .  ஸ்ரீ புரந்தான் என்ற ஊர் முதலாம் பராந்தக சோழரின் காலத்தில் ஸ்ரீபராந்தக சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டது .  உத்தமசோழன் ராஜராஜன் ஆகியோரிடம் உயர் அதிகாரியாக பணியாற்றிய அம்பலவன் பழுவூர் நக்கன் என்பவரின் பெயரால் உருவான ஊர் அம்பலவர் கட்டளையாகும் .

No comments:

Post a Comment